தமிழ்நாடு: கட்டுபாட்டு மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.கொரோனா சமூகப்பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதல்கள் படி மது வாங்குகின்றனரா என்பதை கண்கானிக்க காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் சில இடங்களில் டாஸ்மாக் திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
43நாட்கள் ஊரடங்கிற்கு பின்
43நாட்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வியாழக்கிழமை டாஸ்மாக் திறக்கப்படுவதால் மது குடிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே ‘குடி’மகன்கள் குடைகளை எடுத்து வந்து இடம்பிடித்தனர்.
செவ்வாய்கிழமை திருப்பூர் ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன் “மதுக்கடை திறக்கப்பட்டால் மது வாங்க வரும் பொழுது கண்டிப்பாக குடைகளை எடுத்து வரவேண்டும், மேலும் வரிசையில் நிற்கும் பொழுது சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குடையை பிடித்தபடி நிற்கவேண்டும்”, என தெரிவித்தார்.
குடைபித்தபடி வந்த மதுபிரியர்கள்
இதை கருத்தில் கொண்டு மது வாங்க வந்த அனைவரும் குடைகள் பிடித்த படி இருந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கையில் 238 டாஸ்மாக் கடைகளில் 217 கடைகள் வியாழக்கிழமை முதல் திறக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்தனர்.
மதுரையிலும் மதுக்கடை திறப்பினால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் மகளிர் மற்றும் எதிர்கட்சி தரப்பினர் மதுகடை திறப்பிற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50 முதல் 100 பேர் வரை ஒவ்வொரு மதுக்கடை முன்னும் ‘குடி’மகன்கள் திரண்டிருந்தனர்.
பெண்கள் குழந்தைகள் போராட்டம்
செல்லூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரண்டு இடத்தில் மதுக்கடை திறப்பிற்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது.பிறகு காவல் துறையினர் வந்து கலைந்து செல்லும்படி உத்தரவு இட்டபின் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.