இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு சுவர் இடுக்கில் மாட்டிக்கொண்ட சிறுவன் நித்தீஷ் பத்திரமாக மீட்கப்பட்டான்.
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள முண்டியம்மன் நகரைச் சேந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் நித்தீஷ் (12) தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நித்தீஷ் நேற்று இரவு, தெருவில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய நண்பர்கள் வீட்டின் முன் இருந்த ஒரு சிறிய சுவற்றின் இடுக்கில் நுழைய முடியுமா? எனக் கேட்டுள்ளனர்.
சிறுவயதில் இருந்து நுழைந்து விளையாடிய சுவர் தானே என்று ஒரு வேகத்தில் லபக் என் சுவற்றின் நடுவில் புகுந்தான் அச்சிறுவன்.
பின்பு தான் அவனுக்கு புரிந்தது… நம் உடல் சற்று தடித்து விட்டோமே என்று. உடனே பதற்றத்தில் அலறித் துடித்தான்.
அவனுடைய பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர் வந்து முயற்சித்துப் பார்த்தனர். அப்பொழுதும் அவனை வெளியே கொண்டு வர முடியவில்லை.
உடனே, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் சிறுவன் மயக்கமாகிவிட்டான்.
தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் ஆடையைக் கத்தரிக்கோலால் கிழித்து அகற்றினர். பின்னர் சுவரை லேசாகப் பெயர்த்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே நித்தீஷை பத்திரமாக மீட்க முடிந்தது.