16 சீன இராணுவ விமானங்கள் தனது வான்வெளியில் ஊடுருவியதற்கு எதிராக மலேசிய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சீனாவிடம் முறையிடும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
மலேசிய வான்வெளி மற்றும் இறையாண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீறல் குறித்து விளக்க சீன தூதர் ஆஜராக நோட்டீஸ் அனுப்புவதாக வெளியுறவு மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் வளமான மீன்பிடித் தளமான லுகோனியா ஷோல்ஸ் அருகே திங்கள்கிழமை அத்துமீறிய சீன விமானங்கள் அதன் ரேடாரில் சிக்கியதாக மலேசியாவின் விமானப்படை தெரிவித்துள்ளது. சீன விமானங்கள் போர்னியோ தீவில் சரவாக் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 60 கடல் மைல் (110 கிலோமீட்டர்) தொலைவில் சென்றுள்ளன.
விமானத்தைத் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், மலேசிய விமானப்படை தனது போர் விமானங்களை அடையாளம் காண அனுப்பிய நிலையில், சீன விமானங்கள் பின்வாங்கிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
“மலேசியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எந்த நாடுகளுடனும் நட்பான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருப்பது நமது தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்வோம் என்று அர்த்தமல்ல” என்று ஹிஷாமுதீன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் மலேசியாவின் கண்டனத்தை சீன வெளியுறவு அமைச்சரிடமும் தெரிவிக்க உள்ளதாக அவர் கூறினார். எனினும் இந்த நடவடிக்கை குறித்து, சீனா இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
கிட்டத்தட்ட முழு தென் சீனக் கடலையும் வரலாற்று அடிப்படையில் சீனா உரிமை கோருகிறது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் தென்சீனக்கடலில் உரிமை கோரல்களைக் கொண்டுள்ளன. மேலும் சீனா பல செயற்கைத் தீவுகளை அமைத்து அவற்றை இராணுவத் தளங்களாக மாற்றியதிலிருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதி உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் சிலவற்றைக் கொண்டுள்ளது. மேலும் மீன்வளம், நிலத்தடி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை வைத்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தென் சீனக் கடலில் சீன கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக் கப்பல்கள் 2016 மற்றும் 2019 க்கு இடையில் 89 முறை ஊடுருவியுள்ளதாக மலேசியா கூறுகிறது. மலேசியா சீனாவிற்கு இராஜதந்திர முறை எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.