ட்ரம்பிற்கு தொடரும் எதிர்ப்பு. அண்மையில் CNN நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்பின் தலைமைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 57% பேர் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார்.
இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ-பிடன் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை சிஎன்என் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2-5 ஆம் தேதி வரை நடைபெற்ற கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த ஆய்வில் டிரம்புக்கு ஆதரவாக 38% பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இதில் ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் ஜோ-பிடனை விட 14% பின் தங்கியுள்ளார்.
கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் இந்த கருத்துக் கணிப்பில் ஒட்டுமொத்தமாக 57 சதவீதம் பேர் டிரம்பின் தலைமைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினரிடமும் மிகக்குறைந்த ஆதரவைப் பெற்றுள்ளார் அதிபர் டிரம்ப்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த டிரம்ப் CNN கடந்த முறை தேர்தலுக்கு முன்னர் ஹிலாரி தான் வெற்றி பெறுவார் என கணித்து கூறியது பொய்யாகிப்போனது.
இதேபோல் தற்போதும் போலியான கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது CNN என பதிவிட்டுள்ளார்.