நிலவில் தண்ணீர் நகர்வை கண்டறிந்த நாசா
நாசாவின் லூனார் ரிகனாய்சன்ஸ் ஆர்பிட்டார் (LRO) என்ற செயற்கைகோள் மூலம் சந்திரனில் பகல் நேரங்களில் நீர் மூலக்கூறுகள் நகர்வதை கண்டறிந்துள்ளனர்.
சந்திரனில் தண்ணீர் உள்ளதா? என நீண்ட காலமாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. நிலா எப்பொழுதும் மிகவும் வறண்ட நிலப்பகுதியாகவே காணப்பட்டது.
இதனால் அங்கு தண்ணீர் இருந்தாலும் அதைக்கண்டறிய இயலுமா? என்ற குழப்பத்துடனே விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் ஆராய்ச்சி செய்து வந்தனர்.
லைமன் ஆல்ஃபா மேப்பிங் ப்ராஜக்ட் (Lyman Alpha Mapping Project)
இந்த ப்ராஜக்ட் மூலம் எல்ஆர்ஓ விண்கலத்தின் உதவியுடன் தற்காலிகமாக நிலவில் புதைந்திருந்த தண்ணீர் மூலக்கூறுகளை கண்டறிந்தனர்.
ஒரு நாளில் நடக்கும் மூலக்கூறுகளின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டனர். நீண்ட கால முயற்சியின் இறுதியில் தண்ணீரை கண்டறிந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த அப்போலோ விண்வெளிப் பயணத்தின்போது செய்த சோதனையில் நிலவின் நிலப்பரப்பில் இருந்து நீரைப் பிரித்தெடுப்பது கடினம் என்று கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருங்காலங்களில் நிகழ இருக்கும் நிலவுப் பயணத்திற்கு இந்த தண்ணீர் கண்டுபிடிப்பு மிகுந்த உதவியாக இருக்கும்.
எதிர்காலத்தில் நிலவில் எடுக்கப்படும் நீர், எரிபொருள் தயாரிப்புக்கும், வெப்பநிலையை சீர் செய்யவும் உதவும் என்று ஆராய்ச்சியாளர் அமான்டா ஹென்ட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.