இறந்தவர்களின் அஸ்தி கங்கையில் ஏன் கரைக்க வேண்டும்? கங்கை பூமிக்கு வந்த வரலாறு என்ன? சடலங்களை கங்கையில் வீசுவது சரியா?
இந்தியாவில் எண்ணற்ற நதிகள் இருப்பினும் இந்தியாவின் தேசிய நதி என்று கூறப்படும் நதி “கங்கை” ஆகும். இது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாய்கின்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி எனும் இடத்தில் “பாகீரதி” எனும் பெயரில் பிறந்து தேவபிரயாக் என்ற இடத்தில் அலக்நந்தா என்ற நதியுடன் கலந்து ௧ங்கை என பெயர் பெறுகிறது.
கங்கையானது 2525 கிமீ வரை பாய்கின்றது. ரிஷிகேஷ், ஹரிதுவார், அலகாபாத், பாட்னா, வாரணாசி, கொல்கத்தா ஆகியவை இதன் நதிக்கரையில் அமைந்த நகரங்கள் ஆகும்.
இந்நகரங்கள் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாவை அடைகின்றது. கங்கையின் பெருமைகளை கூறிக் கொண்டே போகலாம்.
இருப்பினும் இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையில் இந்துக்கள் மட்டுமின்றி சமண, புத்த சமயத்தோரும் தங்களின் வாழ்வின் முக்கிய கடமையாக இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைகின்றனர்.
அப்படி கரைத்தால் இறந்தவர்கள் சொர்கத்தை அடைகின்றனர் என்று நம்புகின்றனர். இதன் பின்னனியில் உள்ள கதையை பார்ப்போம்.
கங்கை பூமிக்கு வந்த வரலாறு
சூரிய குலத் தோன்றலாகிய திலீபன் என்ற மன்னனின் மகன் பகீரதன். அவர் தன் முன்னோர்கள் சாபத்தால் இறந்து ஆத்ம சாந்தியற்று இருப்பதை வசிஷ்டர் மூலம் அறிந்தார்.
அவர்கள் சுவர்க லோகம் அடைய உபாயம் வேண்டி பிரம்மாவை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்து பிரம்மாவின் காட்சியைப் பெற்றார்.
பிரம்மா இவரின் முன்னோர்கள் சாபம் தீர தேவலோக நதியான கங்கை நீர் இவரின் முன்னோர்கள் சாம்பல் மீது பட வேண்டும் என்று கூறினார். பகீரதனும் கங்கையை நோக்கி கடும் தவம் புரிந்தார்.
தவத்தால் மகிழ்ந்த கங்கை பூமிக்கு வர சம்மதித்து தன்னுடைய வேகத்தை கட்டுப்படுத்த இயலாது. அவளின் முழு வேகத்தில் பூமிக்கு பாய்ந்தாள் பூமி அழிந்து விடும் எனக் கூறினார்.
தன் வேகத்தை கட்டுப்படுத்த சிவபெருமானால் தான் இயலும் என்றார். பகீரதன் சிவனை வேண்டி நின்றார் அவரும் கங்கையின் வேகத்தை கட்டுப்படுத்த சம்மதித்தார்.
கங்கையும் மிகவும் ஆவேசமாக பூமி தாங்க இயலாத வேகத்தில் பாய்ந்தாள். இதனை கண்ட சிவன் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை சிறைப்பிடித்தார்.
பகீரதனும் சிவனின் சடாமுடியில் அடைப்பட்ட கங்கையை பூமிக்கு அனுப்ப வேண்டுமாறு வேண்டினார்.
சிவனும் பூமி தாங்கும் அளவிற்கு கங்கையை பாகீரதனுடன் அனுப்பினார். பிந்து சரஸ் மலை மீது பாயச் செய்தார். பாகீரதன் மூலம் பூமிக்கு வந்ததால் “பாகீரதி” எனப்பெயர் பெற்றாள்.
அஸ்தியை கரைத்தால் சாபம் நீங்கும்
பிந்து சரஸ் மலையிலிருந்து கங்கை பூமியெங்கும் பாய்ந்தாள். பகீரதன் முன்னோர்களின் சாம்பல் மீது பட்டு சாபம் நீங்கி சுவர்கலோகம் அடைந்தனர்.
கங்கையும் இமயத்திலிருந்து தான் பாய்ந்த இடம் முழுதும் செழுமையாக மாற்றி அனைவரின் பாவங்களையும் போக்கினாள்.
இதனால் தான் இன்றளவும் இறந்தவர்களின் சாம்பலை (இறந்தவர்களின் அஸ்தி) கங்கையில் கரைத்தால் அவர்களின் சாபம் நீங்கி நற்கதி் அடைகின்றனர் என நம்பப்படுகிறது.
கங்கையில் சடலங்கள் வீசுவது சரியா?
கங்கையானது 5-வது மாசு அடைந்த நதியாக 2007 இல் கணக்கிடப்பட்டுள்ளது. மனிதர்கள் சாம்பலை மட்டும் கரைக்காமல் பல்வேறு பொருட்களை கங்கையிலே போடுவதனால் இந்த மாசு ஆனது ஏற்படுகின்றது.
இறந்தவர்களின் சடலைத்தை கூட கங்கையில் சேர்க்கின்றனர். பாவம் போகும் என்ற நினைப்பில் பாவ காரியங்களையே செய்கின்றனர்.
இது போன்ற செயலால் கங்கையை நம்பி உள்ள நீர் வாழ் உயிரினங்கள் மடிகின்றன. ஒருபிடி சாம்பல் சேர்ப்பதே போதுமானது இறந்தவர்கள் நற்கதி அடைவர்.
மாறாக இறந்தவர்களின் உடைமைகள், பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எந்த புராணத்திலும், வேதத்திலும் இல்லை. நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூட நம்பிக்கைகள் கூடாது.
இனியாவது கங்கையை தூய்மையாக வைத்து நாமும் பாவங்களைப் போக்கி நற்கதி அடைவோம்.