தானாய் தோன்றிய வீரமாகாளியம்மன் வரலாறு, வீரமாகாளியம்மன் சிறப்புகள், திருமண தோஷம் நீக்கி திருமண வரம் தரும் பொட்டு தாலி காணிக்கை, சகல தோஷங்களும் நீக்கும் அதிசயமான கோவில்.
கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்க கூடிய அன்னை மஹா காளி பல்வேறு திருநாமங்களில் உலகெங்கும் அருளாட்சி புரிந்து வருகிறாள்.
தசமஹா வித்யா தேவியர்களில் முதல் தேவியாக விளங்குபவள், ஞானமே வடிவமானவள், கோர ரூபம் கொண்டு எதிரிகளை வேர் அறுப்பவள், தன் குழந்தைகளை காப்பதில் நிகரற்றவள் என அன்னையின் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட அன்னை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் “வீரமாகாளியம்மன்” என்ற திருநாமத்துடன் அருளாட்சி புரிந்து வருகிறாள்.
தானாய் தோன்றிய வீரமாகாளியம்மன்
அறந்தாங்கியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அன்னையை சுயம்புவாக வழிபட்டு வந்துள்ளனர்.
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் அன்னைக்கு திருவுருவச் சிலை செய்து வழிபட எண்ணினர். அதன்படி திருவுருவமும் சிற்பியை கொண்டு செய்து முடித்தனர். அத்திருவுருவச் சிலைக்கு நான்கு கரங்கள் கொண்டு வடிவமைத்துள்ளனர். ஆனால் அந்தச் சிலையின் வலது மேற்கரத்தில் ஒரு விரலில் மட்டும் சேதம் ஏற்பட்டதாம். இதை கண்டு பக்தர்கள் மனம் வருந்தியுள்ளனர்.
அன்று இரவு கோவில் பூசாரியின் கனவில் காளி அன்னை தோன்றி, “நான் வெளிபடும் நேரம் வந்து விட்டது. ஒரு ஆடு ஒன்றை கோவில் நிலத்தில் நடக்க விடுங்கள் அது எங்கு சென்று அமர்கிறதோ அங்கே தோண்டி பாருங்கள். என் வடிவம் உங்களிடம் கிடைக்கும்” எனக் கூறி மறைந்தாள்.
கனவு தெளிந்து பூசாரி நடந்தவற்றை ஊர் மக்களிடம் கூறி காலையில் அன்னை கூறியது போலவே ஒரு ஆட்டை நடக்க விட்டனர். ஆடும் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டது. உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது பிரம்மாண்டமான அன்னையின் திருவுருவம் வெளிப்பட்டது.
அச்சிலை எட்டு திருகரங்களையும், அசுரனை காலில் போட்டு மிதித்த கோலத்திலும் இருந்தது. மேலும் மக்கள் செய்த சிலை போலவே திருவுருவத்தின் வலது மேற்கரத்தில் ஒரு விரல் சேதமாக இருந்தது. ஆகம விதிப்படி பின்னமான சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட கூடாது என்பதால் மக்கள் வருந்தினர்.
அன்று இரவே மீண்டும் அம்பிகை தோன்றி “உங்கள் வீட்டில் யாராவது ஊனம் இருந்தால் அவர்களை தூக்கி வீசிவிடுவீர்களா? நான் உங்களை காக்க உதித்தவள் என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்” என்று அன்னை கூறி மறைந்தாள்.
அன்னையின் அருள் வாக்கின்படி கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பஞ்ச பாண்டவர்களின் வனவாச காலத்தில் அன்னையை தரிசனம் செய்து தங்குவதற்கு இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
வீரமாகாளியின் திருவுருவ சிறப்பு
வீரமாகாளியம்மன் அமர்ந்த கோலத்தில் எட்டு திருக்கரங்களுடன். சூலம், பாசம், கேடயம், மழு, பத்மம், அக்னி, உடுக்கை, கபாலம் ஆகியவற்றை ஏந்தி இடது காலில் அரக்கனை அழுத்தியபடி காட்சி தருகிறாள்.
திருமுடியில் நாகமும், செவியில் சிவபெருமான் அணியும் ஆபரணத்தை அணிந்து கோரைப் பற்களுடன் சாந்த முகம் கொண்டு. சிவசக்தி ஸ்வரூபமாக விளங்குகிறாள்.
திருமண வரம் வேண்டி பொட்டு தாலி வேண்டுதல்
திருமணம் வரம் வேண்டி பொட்டு தாலி காணிக்கையாக தருவதாக வேண்டுதலை வேண்டி திருமணம் முடிந்ததும் காணிக்கையை செலுத்தும் நடைமுறையானது இக்கோவிலில் உள்ளது.
சாதரண பொட்டு தாலியோ, வெள்ளி அல்லது தங்கத்தால் ஆன பொட்டு தாலியோ அவரவர் வசதிக்கேற்ப நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
அன்னையிடம் தூய்மையான பக்தியே போதும் உடனடியாக பலன்களை வாரி வழங்குகிறாள்.
குழந்தை வரம் வேண்டி வீரமாகாளியிடம் வேண்டுவோர்க்கு குழந்தை வழங்கிறாள். அன்னையின் வரத்தால் குழந்தையை பெற்றவர்கள் அன்னைக்கே குழந்தையை தத்து கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.
முப்பது நாட்கள் திருவிழா
வீரமாகாளியம்மன் அறந்தாங்கியை சுற்றியுள்ள பதினாறு ஊர்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள்.
அன்னைக்கு முப்பது நாட்கள் திருவிழா நடப்பது சிறப்பான விடயம் ஆகும். ஆனி கடைசியில் அல்லது ஆடி ஆரம்பத்தில் பூச்சொரிதலுடன் திருவிழா ஆரம்பமாகி முப்பது நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு அருள்புரிவாள் வீரமாகாளி
மக்கள் கேட்ட வரத்தை வழங்கும் தயாபரியாக அருளாட்சி செய்கிறாள் வீரமாகாளி.
சர்வ சக்தியாக விளங்குகின்ற அன்னை வீரமாகாளியம்மனை சென்று தரிசனம் செய்து அனைவரும் சகல தோஷங்களும் நீங்கி திருமணம் வரம், குழந்தை வரம் பெற்று வாழ்வாங்கு வாழ பிராத்தனை செய்வோம்.
Nice