Home ஆன்மிகம் சித்திரா பௌர்ணமி: தமிழர்களின் காதலர் தினமா? மறைந்து போன தமிழர்களின் இந்திர விழா!

சித்திரா பௌர்ணமி: தமிழர்களின் காதலர் தினமா? மறைந்து போன தமிழர்களின் இந்திர விழா!

2196
2

சித்திரா பௌர்ணமி: தமிழர்களின் காதலர் தினம் என்று ஒன்று உண்டா? இந்திர விழா எவ்வாறு கொண்டாப்பட்டது? இந்திர விழா கொண்டாடப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதா?

தமிழர்களின் வாழ்வியலில் தொன்று தொட்டு பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் எண்ணற்ற விழாக்கள் தற்காலத்தில் மறைந்தும் விட்டன.

பல தமிழர் விழாக்களை கூட வேறு பெயர்களில் கொண்டாடி வருகிறோம். இப்படிபட்ட நிலையில் தொன்மையான பழந்தமிழர் கொண்டாடிய சித்திரை மாத பௌர்ணமி விழாவே “இந்திர விழா” ஆகும்.

மறைந்து போன இந்திர விழா

ஐம்பெருங்காப்பியங்களில் முதல் இரண்டு காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இவ்விழா குறித்த செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன.

தேவர்களின் அரசனான தேவேந்திரனுக்கு மக்கள் விழா எடுத்து கொண்டாடினர். தொல்காப்பியர் கூறும் ஐவகை நிலங்களில் மருத நிலத்திற்கு உரிய தெய்வம் “இந்திரன்” ஆவார்.

மருத நிலப்பகுதியான சோழ தேசத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது என கூறும் போது அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.

காரணம் இன்றளவும் அவரவர் ஊர்களில் உள்ள தெய்வங்களுக்கு விழா எடுப்பது தமிழர்களின் மரபாகும்.

மழை, இடி, மின்னலுக்கான தெய்வம் இந்திரன். இந்திரனை பூஜிக்காவிட்டால் இயற்கை சீற்றத்தால் ஊர் அழித்துவிடும் என நம்பினர்.

சோழ வள நாட்டில் பெரும் நகரங்களான மருவூர் பாக்கம் மற்றும் பட்டினப் பாக்கத்திற்கு இடையேயான மையப் பகுதியில் இந்திரனுக்கு விழா கொண்டாடி உள்ளனர்.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை காலத்துக்கு இடையே கடற்கோள் வந்து பூம்புகார் நகரை அழித்தது குறித்து மணிமேகலையில் அறவண அடிகள் மணிமேகலையிடம் கூறியுள்ளார். காரணம் இந்திர விழாவை மறந்து விடுத்ததால் இந்திரன் சாபமிட்டு அழித்தார் என்று விளக்குகின்றார்.

மேலும் புகார் நகரத்தின் இந்திர விழா மன்னர்கள் மூடி சூட்டும் விழாவைப்போல வெகு சிறப்பாகக் கொண்டாடி உள்ளனர். இவ்வாறு தமிழகத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தில் இந்திர விழா!

சிலப்பதிகாரத்தில் ஐந்தாம் காதை “இந்திரவிழவு ஊரெடுத்த காதையாகும்” இதில் இந்திர விழா துவங்கி எப்படி கொண்டாடப்பட்டது.

கோவலன் மாதவியின் இந்திர விழா சந்திப்பு குறித்து கூறுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுமதி நாள் துவங்கி இருபத்தி எட்டு நாட்கள் இந்திர விழா கொண்டாடப்பட்டது.

பேரரசன் முன் நின்று விழாவை நடத்துவான். வடநாட்டில் இருந்து மக்கள் இவ்விழாவை காண வருவார்கள். தேவர்கள் வானில் இருந்து விழாவை கண்டு ரசிப்பார்கள்.

இந்திரனின் கோவில் இருந்ததாகவும் அதற்கு “வஜ்ர கோட்டம்” என்று பெயர் என்றும் கூறப்படுகிறது.

முசுகுந்த சோழனுக்கு இந்திரன் காவலுக்கு அனுப்பிய பூதத்திற்கு பலியிடுதல் நடைபெறுமாம்.

“இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியி னிடைநில மாகிய

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போ ரோதையுங் கொள்வோ ரோதையும்

நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

வெற்றிவேன் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் தேவர் கோமா னேவலிற் போந்த

காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும்

பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப்

பெருநில மன்ன னிருநில மடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி

மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்
மூதிற் பெண்டி ரோதையிற் பெயர”
சிலப்பதிகாரம்

என்று சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவின் சிறப்பு கூறப்படுகிறது. மேலும் விழா தொடங்க ஏழு நாட்களுக்கு முன் கால்கோள் நட்டு துவங்கினர்.

முளைப்பாரி வளர்த்தனர். வீடுகளை சுண்ணம் பூசி, சாணி மெழுகி தூய்மை செய்தனர். ஊர் முழுவதும் மலர்கள், இலைகளால் தோரணங்கள் கட்டப்படும்.

யானை மீது பிடரியில் பெரிய முரசேற்றி அதை வஜ்ர கோட்டம் முதல் ஐராவத கோட்டம் வரை கொண்டு செல்வர். விழா முதலிலும், கடையிலும் இந்நிகழ்வு நடக்கும்.

ஐம்பெரும்மன்றங்கள் அமைத்தனர், குறுநில மன்னர்கள் பேரரசன் நீடூழி வாழ காவிரி நீர் கொணர்ந்து இந்திரனுக்கு நீராட்டினர்.

வீரர்கள் மண்ணும் மக்களும் வளம் பெற சதுக்கத்தில் உள்ள பூதத்திற்கு பலியிட்டு கொண்டனர். மகளிர் துணங்கைக் கூத்து மற்றும் குறவைக் கூத்து நடத்தினர்.

“எந்த அரசன் இந்திரனுக்கு விழா எடுத்துக் கொடி நாட்டுகிறானோ அந்த அரசனுடைய நாட்டில் சந்தேகமேயில்லாமல் வேண்டிய அளவு மழை பெய்யும்” என நம்பினர்.

மக்கள் அனைவரும் கறிசோறு, பட்சணங்கள், எள் உருண்டை ஆகியவற்றை சமைத்து ஆற்றங்கரை மற்றும் கடற்கரையில் சென்று முழுமதி நாளில் உணவைப் பகிர்ந்து உண்டனர்.

இந்த இந்திர விழாவில் தான் மாதவியும் கோவலனும் சந்தித்து காதல் கொண்டனர். இதே இந்திர விழாவில் தான் 13 ஆண்டுகள் கழித்து பிரிந்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.

இப்படி காதலர்கள் சந்தித்து மகிழும் காதல் விழாவாக இருந்துள்ளது. காதல், வீரம், ஒற்றுமை என அனைத்தும் ஒரு சேர கலந்து இருந்தது இந்திர விழா.

மணிமேகலையில் இந்திர விழா!

மணிமேகலையில் முப்பது காதைகளில் முதல் காதை “விழா அறை காதை” ஆகும். இதில் புகார் நகரில் நடைபெறும் சிறப்பான இந்திர விழா குறித்து விளக்கமாக கூறப்படுகிறது.

மணிமேகலையில் இந்திர விழாவில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து செம்பியன் அரசன் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணல் பரப்புங்கள், ஊர் அம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரைகளை ஆற்றுங்கள்,

உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களைக் காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்,

கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள்,

வெண்மையான மணற் குன்றுகளில் மலர்ச்சோலைகளில் குளிர்ந்த மணலை உடைய ஆற்றங்கரையில் மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும்,

நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான்.

இவ்வாறு மணிமேகலையில் இந்திர விழா காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டது என அறிய முடிகிறது.

காதலர் தங்குவதற்கான இடமும் அமைக்கப்படிருந்தது. வெகு நாட்கள் பிரிந்த காதலரும் இந்த இந்திர விழாவில் சந்தித்து கொள்வர் என்கிறது மணிமேகலை.

இவ்வாறு இந்திர விழாவானது இந்திரனுக்கு எடுக்கப்பட்ட விழா மட்டுமின்றி தமிழர்களின் காதலர்களுக்கான காதலர் தினமாகவும் இருந்திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இந்திர விழா மற்றும் இந்திர கோட்டம் குறித்து சிலப்பதிகாரம் மணிமேகலை மட்டுமன்றி  எட்டுத்தொகை நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.

2020-இல் சித்திரா பௌர்ணமி

தமிழர்களின் தொன்மையான விழாவான இந்த சித்திரா பௌர்ணமியில் இந்திர விழா மறைந்து போனாலும். மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆற்றங்கரையில், கடற்கரையில் முழுநிலவு ஒளியில் உணவு பரிமாறி உண்ணும் பழக்கம் இன்றளவும் உள்ளது.

இதுவும் தற்காலத்தில் நாகரீகம் என்ற பெயரில் பலரும் அறியாமல் வருங்காலத்தில் மறைந்து போய்விடும்.

மக்கள் அனைவரும் தவறாமல் நாளை மே 7-ஆம் தேதி சித்திரா பௌர்ணமியில் இந்திரனை வேண்டி பூசை செய்து இரவில் வீட்டின் மாடியிலாவது அமர்ந்து உணவு உண்டு சித்திரை முழு நிலவு நாளை கொண்டாடுவோம்.

Previous articleஇனி ஜி.பி.எஸ் தரவுகள் சேமிக்கப்படாது
Next articleஎன்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை: பாரதிராஜா விளக்கம்!

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here