Home ஆன்மிகம் சதுர்த்தி விரதம்: 900 ஆண்டுகள் பழமையான விநாயகருக்கான தனிக் கோவில்!

சதுர்த்தி விரதம்: 900 ஆண்டுகள் பழமையான விநாயகருக்கான தனிக் கோவில்!

1
533

சதுர்த்தி தின சிறப்பு கட்டுரை: இராஜ கோபுரத்துடன் உள்ள ஒரே ஒரு விநாயகர் ஆலயம், 900 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில், உச்சிஷ்ட விநாயகர் காட்சி தரும் ஆலயம்.

மூல முதற் பொருளாக விளங்குகின்ற பார்வதியின் புத்திரன் நம்மை எல்லாம் காத்து இரட்சிக்கும் கணநாதன் இல்லாத இடங்களே கிடையாது.

அனைவருக்கும் செல்ல பிள்ளையாய் இருப்பவர் தான் விநாயகர். அரச மர நிழல், குளத்தங்கரை, ஆற்றங்கரை என எங்கு பார்ப்பினும் கணபதி கொலுவிருப்பார்.

பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோட்டை என கோவில் கொண்டிருந்தாலும் அவையெல்லாம் விநாயகரின் தனி கோவில் கிடையாது. மூலவராக சிவபெருமானே இருப்பார்.

ஆனால் விநாயகருக்கு என்று தனி கோவிலும் உண்டு. அதிலும் இராஜ கோபுரத்துடன் கூடிய மிகப்பெரிய விநாயகர் கோவில் தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த மணிமூர்த்தீஸ்வரம் “உச்சிஷ்ட கணபதி” திருக்கோவில் ஆகும்.

உச்சிஷ்ட கணபதி ஆலய வரலாறு

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் 900 ஆண்டுகளுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் இராஜ கோபுரத்துடன் உள்ள ஆலயம் தான் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில்.

உச்சிஷ்டம் என்றால் மிச்சம் அல்லது எஞ்சியது என்று பொருள். உலகம் அழியும் போது முழுதும் அழியாது. எதாவது ஒன்று எஞ்சி இருக்கும். இப்படி அழிந்ததிலும் எஞ்சியதை வைத்து ஆக்கத்தை புரிபவரே உச்சிஷ்ட கணபதி ஆவார்.

கலியுகம் தோன்றிய பின் விநாயக பெருமானை கலியுக மக்கள் அறிய செய்ய ஹேரண்ட மகரிஷி விநாயகர் புகழை பரப்பி் வந்தார்.

அந்த ஹேரண்ட மகரிஷியால் பிரதிட்டை செய்யப்பட்ட விநாயகரே இந்த உச்சிஷ்ட கணபதி ஆவார். உச்சிஷ்ட கணபதி கோலம் விநாயகரின் முப்பத்தி இரண்டு கோலங்களில் எட்டாவது திருவடிவம் ஆகும்.

துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரின் சக்தியாக நீலவாணி உள்ளார். இவரே விநாயகரின் மடியில் அமர்ந்துள்ளார். எனவே கூடுதல் பலத்துடன் விநாயகர் காட்சி தருகிறார்.

இத்திருக்கோயில் அருகில் பைரவ தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி விநாயகரை வணங்குவது சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள திருத்தலம் ஆகும்.

முற்காலத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் பூசையில் ஒலிக்கப்படும் மணியோசை இங்கே கேட்ட பின் பூசை துவங்குமாம் எனவே தான் மூர்த்தீஸ்வரம் என்ற இவ்வூர் மணிமூர்த்தீஸ்வரம் எனப் பெயர்ப் பெற்றது எனக் கூறப்படுகிறது.

உச்சிஷ்ட கணபதி வழிபாடு

உச்சிஷ்ட கணபதி வழிபாடு என்பது மிகவும் பழமையான ஒன்று இரகசியமானதும் கூட. இவரை தாந்திரீக முறைகளிலும் பூஜிக்க சகல சக்திகளும் கிடைக்கும் என தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.

ஆனால் இத்திருத்தலத்தில் அனைவரும் எளிமையாக சென்று வணங்கும் வகையில் அமைத்துள்ளனர்.

எந்த வித மந்திர தந்திரங்களும் தேவையில்லை தன்னை வணங்குவோரை வளம் பெற வாழச் செய்கிறார் இந்த உச்சிஷ்ட கணபதி.

இவருக்கு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தேங்காய் மாலை சாற்றினால் அனைத்து நன்மைகளும் தருவார் என நம்புகின்றனர் பக்தர்கள்.

அவல், கொழுகட்டை, சுண்டல், அப்பம், தேங்காய், கரும்பு, வாழைப்பழம் முதலியவற்றை நைவேத்தியமாக படிக்கின்றனர்.

திருமண தடை நீங்கவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இங்கே வந்து பிராத்தனை செய்தால் நிச்சயம் பலன் அளிப்பார் உச்சிஷ்ட மகா கணபதி.

உச்சிஷ்ட கணபதி ஆலய அமைப்பு

உச்சிஷ்ட கணபதி ஆலயமானது ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன், கம்பீரமான கொடி மரத்துடன் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

கோவிலை வலம் வந்தால் சிவன், பார்வதி, முருகன் சன்னதிகளும் உள்ளன. கருவறையில் நான்கு திருகரங்களுடன் நீலவாணியை மடியில் அமர்த்தி கொண்டு காட்சி தருகிறார் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி.

முற்காலத்தில் பாண்டியர்கள், நாயக்கர்கள் பின் நகரத்தாரால் பராமரிக்கப்பட்டும், திருப்பணிகள் செய்யப்பட்டும் வந்ததற்கு சான்றுகள் கோவிலில் உள்ளன.

2016ஆம் ஆண்டு தொண்டர்களின் சீரிய முயற்சியால் குடமுழுக்கு நடைப்பெற்று உள்ளது. தற்பொழுது மிக அழகாக வண்ண பூச்சுகளுடன் 108 விநாயகர் உருவங்கள் கொண்டு இராஜ கோபுரம் காட்சி தருகிறது.

நலன்களை அள்ளித் தருவார் உச்சிஷ்ட கணபதி

வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருளை அள்ளித் தரும் கருணை கடலாக உச்சிஷ்ட கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் சகல பாவங்களும் நிவர்த்தி ஆகும்.

திருநெல்வேலி சென்றால் தவறாமல் மணிமூர்த்தீஸ்வரம் சென்று உச்சிஷ்ட கணபதியை வணங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.

அமைவிடம்: திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here