முதல் டி20 இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடக்கவுள்ளது. நேரடியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி படைத்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு விளையாட வந்துள்ளது.
இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று விசாகப்பட்டிணத்தில் இரு அணி வீரர்களும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இடைக்காலத் தடையில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மூத்த வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பாதது அவர்களுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும்.
இத்தொடரின் வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே உலகக் கோப்பை அணி தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால், இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் ஊடகங்களிடம் பேட்டி அளித்த கேப்டன் விராத் கோலி, புல்வாமா தாக்குதலில் உயிரழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை போட்டி பிசிசிஐ மற்றும் மத்திய அரசு சொல்வதை பொறுத்தே விளையாட முடிவு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.