NZ vs IND ODI 2020: இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? நியூசிலாந்து vs இந்தியா (NewZealand vs India) ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து (NewZealand vs India) கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி-20 போட்டியைத் தொடர்ந்து இன்று முதல் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி-20 தொடரில் நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் முழு வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs நியூசிலாந்து ஒரு நாள் போட்டி
இன்று ஹேமில்டனில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஒரு நாள் போட்டி (NZ vs IND ODI 2020) தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டிகளில் இந்திய அணி தன்னுடைய அபார ஆட்டத்தைத் தொடருமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், வரும் எட்டாம் தேதி முதல் இரண்டாவது ஒருநாள் போட்டியும், 11-ம் தேதி மூன்றாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
இதனைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது.
இப்போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா காயம் காரணமாக விலகல்
இதற்கிடையே கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஆடிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அதன்பின் காயம் காரணமாக பீல்டிங் செய்ய வரவில்லை. தசைப்பிடிப்பு முழுமையாகக் குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரோகித் சர்மாவிற்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் காயம் முழுமையாகக் குணமடையாததால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
தொடக்க வீரர் ரோகித்சர்மா காயத்தால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்டில் விலகி இருப்பது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே என கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதனால் லோகேஷ் ராகுலும், அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்குவார்கள். கேப்டன் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ்பாண்டே ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
நியூசிலாந்து கேப்டன் விலகல்
அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மாவினை தொடர்ந்து 3-வது டி20 ஆட்டத்தில் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
இதனால் முதல் இரு ஒருநாள் ஆட்டங்களின் நியூசிலாந்து கேப்டனாக டாம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஓய்வில் உள்ள வில்லியம்சன், பிப்ரவரி 11 அன்று நடைபெறவுள்ள 3-ம் ஒருநாள் ஆட்டத்தில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு ஒருநாள் போட்டிகளிலிருந்து வில்லியம்சன் விலகலை அடுத்து, மார்க் சேப்மேன் நியூசிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.