பிரதமர் மோடிக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கமல் ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதை நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 3,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 111 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 5 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் பிரதமர் மோடி நாட்டு மக்களை ஒற்றுமையுடன் விளக்கேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதற்கேற்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை எனும் நம்பிக்கை ஒளியை ஏற்றினர்.
இந்த நிலையில், கமல் ஹாசன் விளக்கேற்றச் சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதினார். அதில் எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா? உங்களது தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது.
தலைலேல் கூரையே இல்லாத மக்களின் நிலை என்ன ஆவது? எப்போதும் போன்று நீங்கள் பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக இருக்கிறீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கடிதம் எழுதினார்.
கமல் ஹாசன் எழுதிய கடிதத்தை விமர்சித்து காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின் பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக் காட்டக்கூடாது?
எப்போதும் அரசின் உத்தரவை மதிக்காத கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பில்லாத குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள்.
தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்எல்ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், நாட்டு மக்கள் அனைவரும் விளக்கு ஏற்றி தங்களது ஒற்றுமையை காட்டினார்கள். ஆனால், நீங்கள் அதில் பங்கேற்கவில்லை. இது உங்களுக்கு உறுத்தவில்லையா?
நாட்டு மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் உழைத்து வருகின்றன என்று அவர் பதிவிட்டுள்ளார்.