Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது குதிரையில் அமர்ந்து வாள் சண்டை செய்த கார்த்தி குதிரையால் தூக்கிவீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ponniyin Selvan: பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் முடிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது ஹைதராபாத் பகுதியில் 2-ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கார்த்தி கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
அப்போது குதிரையில் இருந்தவாறு வாள் சண்டை போடும் காட்சி வந்துள்ளது. இதில், கார்த்தி நடித்துக்கொண்டிருந்த போது குதிரையிலிருந்து கயிறு மூலமாக அப்படியே தூக்கி வீசப்பட்டதாக தெரிகிறது.
இதில், பலத்த காயம் ஏற்படாமல், லேசான காயத்துடன் உயிருக்கு ஆபத்தின்றி தப்பியுள்ளார்.
இப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, அதிதி ராவ் ஹைதரி, சரத்குமார், விக்ரம் பிரபு, ரியாஷ் கான், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, மோகன் ராமன், கிஷோர், லால் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
இதையடுத்து, வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் கைதி மற்றும் தம்பி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது.
இதில், கைதி படத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனமும் தம்பி படத்திற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைகாலமாக படப்பிடிப்பு தளங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், சென்னை சாலிகிராமம் பகுதியிலுள்ள சினிமா படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தளம் முழுவதும் தீயில் எரிந்துள்ளது.
எனினும், இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை முற்றிலும் அணைத்துள்ளனர்.
ஆனால், படப்பிடிப்பு தளத்தில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.