நடிகர் ரியாஷ்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
ரியாஷ்கான் தான் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு தடை உத்தரவு முடியும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றிற்கு பிறபகல் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையே காரணமாக வைத்துக் கொண்டு மக்கள் கொரோனாவின் உண்மை நிலவரம் குறித்து கவலை கொள்ளாமல் ஜாலியாக வெளியில் சுற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தான் வில்லன் நடிகர் ரியாஷ்கான் வீட்டருகில் வெளியில் சுற்றி வந்த ஒரு கும்பலை அவர் கண்டித்துள்ளார்.
ஆனால், அவர்கள் அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் ரியாஷ்கானை தாக்கியுள்ளனர்.
இது குறித்து ரியாஷ்கான் புகார் அளிக்க அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்த வீடியோ ஒன்றை ரியாஷ்கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அனைவரும், வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள். எனக்கு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
என் வீடு தெரு முனையில் இருப்பதால், இருபுறமும் சாலைகள்தான். மாலை 5 மணியளவில் வீட்டின் பெட்ரூம் பால்கனியில் நின்று காஃபி குடித்துக் கொண்டிருந்தேன். என் வீடு இருக்கும் கார்னரில் 10 பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள்.
உடனே நான் கீழே சென்று அவர்களிடம் என்ன எல்லோரும் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறீர்கள் எங்கு போறீங்க என்று 10 அடி தூரத்திலிருந்து கேட்டேன்.
நாங்க காற்று வாங்க வந்தோம் சார் என்றார்கள். நான் உடனே தப்பான பதில் அல்லவா 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிற்து. கொரோனா வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியும்.
அப்படியிருக்கும் போது இப்படி கும்பலாக வரலாமா? இப்படி நின்றால் உங்களுக்கும் கெடுதல், எனக்கும் கெடுதல். நீங்கள் எந்த ஏரியாவிலிருந்து வர்றீங்க என்று கேட்டேன்.
நாங்க ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கோம். சும்மா இங்கிட்டு வந்தோம் என்றார்கள். நான் உடனே உங்கள் வீட்டிற்கு சென்று காத்து வாங்குங்கள் என்றேன்.
அதற்கு நாங்கள் ரோட்டுல தானே நிற்கிறோம். உங்கள் வீட்டிற்கு வரவில்லையே என்று சொன்னார்கள். நடிகர் ரியாஷ்கானா இருந்தால் சினிமாவில் இருக்கட்டும்.
எங்களிடம் இதெல்லாம் சொல்ல வேணாம். இந்த கொரோனா வைரஸ் எங்களுக்கு வராது. நீங்கள் எங்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டாம் என்றார்கள்.
உடனே நான், புத்திமதி சொல்லவில்லை. என்னோட குடும்பத்தை நான் காப்பாற்ற ஆசைப்படுகிறேன். பக்கத்து வீடு, எதிர் வீடு அவர்களுக்கு எல்லாம் எதுவும் வரக்கூடாது என்று சொல்கிறேன்.
உங்கள் நன்மைக்கும் தான் சொல்கிறேன். தயவுசெய்து கலைந்து செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது கூட தனித்தனியாகச் செல்லுங்கள். கும்பலாகச் செல்லாதீர்கள் என்றேன்.
அப்போது பேசிக்கொண்டே என்னருகில் நடந்து வந்து, அதில் ஒருவன் எகிறிக் குதித்து என் மண்டையில் அடிக்க வந்தான்.
அப்போது நான் விலகவே, என் தோளில் அடிபட்டுவிட்டது. ஏன் இதெல்லாம் யாருக்குமே ஏன் புரியவில்லை? லாக்டவுன் தொடங்கி 17 நாட்கள் ஆகின்றன.
இதுவரைக்கும் அவர்களுக்கு அதன் சீரியஸ் என்னவென்று புரியவில்லை. ரொம்பக் கவலையாக இருக்கிறது என்றார்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் தரப்பினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் வந்து அந்த கும்பலைக் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜோதி மேடத்துக்கு நன்றி. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களது பசங்களைக் கைது செய்ததற்கு எவ்வளவு கவலைப்படுவார்கள்.
தயவுசெய்து பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே இந்த கொரோனா வைரஸை ஒழிக்க முடியும்.
இல்லையென்றால் முடியவே முடியாது. அனைவருமே பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.