விழுப்புரம்: திங்கள் கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்கானத்தில் 4 அடி உயர விஷ்ணு சிலை குளம் தூர்வாரும் பொழுது கண்டெடுக்கப்பட்டது.
500 வருடங்கள் பழமை வாய்ந்த விஷ்னு சிலை
காரிப்பாளையம் கிராமத்தில் இந்த சிலையானது பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது 500 வருடங்கள் பழமை வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குடிமராமத்து பணி துவங்கப்பட்டது
கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “காரிப்பாளையம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றாகும் மற்றும் இங்கு நான்கு குளங்கள் உள்ளன. பல வருடங்களாக இங்குள்ள குளங்களில் தூர்வாரப்படாமல் இருந்தமையால் இவைகளை தூர்வார, கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் குடிமராமத்து பணி திட்டத்தில் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டு, சனிக்கிழமை அதற்கான பணிகள் துவங்கப்பட்டன”.
குளத்தில் கல் போன்ற பொருள் தட்டுபட்டது
திங்கட்கிழமை மாலை ஊற்றுகுளம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பொழுது கல் போன்ற பொருள் தட்டுபட்டதை அடுத்து தூர்வாரும் இயந்திர ஓட்டுநர் அதை மக்களிடம் தெரிவித்தார்.
விஷ்னு சிலை கண்டெடுப்பு
மரக்கானம் தாசில்தார் தெரிவிக்கையில், “கிராம மக்கள் கல் போன்ற பொருளை கைகளால் எடுத்தனர். அப்போது அது விஷ்ணு சிலை என தெரியவந்தது மேலும் அதன் இரண்டு கைகளும் உடைந்த நிலையில் இருந்தன,”
கிராம மக்கள் அந்த சிலையை அருகில் இருந்த கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினர்.