சென்னையில் 7000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று சென்னையில் புதிதாக 364 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்றுமுதல் 4-ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிராமபுறங்களில் உள்ள சலூன் கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கி தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார். நேற்று தமிழகத்தில் மட்டும் 536 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் 364 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் இதுவரை கொரோனா நோய் பாத்தித்தவர்களின் எண்ணிக்கை 7,117 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 3 பேர் நோய் தொற்றிற்கு பலியானதை அடுத்து இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயிரிழப்பு விகிதம் என்பது 0.68% ஆகவே உள்ளது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் மிக குறைந்த சதவிகிதம் தான் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7,270 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 61 சோதனை மையங்கள் இயங்கிவருகின்றன.
கடந்த 108 நாள்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் என அரசு இயந்திரம் முழுவதுமாக போராடிவருகிறது.
மக்கள் பதப்படவோ, பயப்படவோ, பீதிஅடைய வேண்டாம். பரிசோதனையில் எந்த குறையும் இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி யாரும் விடுபடாமல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே தமிழகத்தில் குறைவான பரிசோதனை என்ற கருத்து ஏற்புடையதல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.