ஆடி மாத தரிசனம் 5: பக்தர்களுக்காக இடம் மாறி திரும்பி அமர்ந்த சௌடேஸ்வரி. பக்திக்கு மிஞ்சிய சக்தியில்லை என்பதை உணர்த்திய நந்தவரம் சௌடேஸ்வரி.
சிறப்பிற்குரிய ஆடி மாதத்தில் அன்னையின் பேரானந்த கருணையினை சிந்தித்து மனம் மகிழ்ந்து வருகிறோம்.
தமது பிள்ளைகளின் வேண்டுதலுக்காக அன்னை பராசக்தி பல்வேறு திருநாமங்களில் பல அவதாரங்களை எடுத்து அருள்புரிந்து வருகிறாள்.
அந்த வகையிலே நெசவு நெய்யும் குல மக்களுக்காக அவர்களின் குல தெய்வமாக அன்னை பார்வதி தேவி எடுத்த அவதாரமே சௌடேஸ்வரி தேவி ஆவாள்.
அவள் அருள்புரியும் அற்புதமான திருத்தலமே ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் நந்நவரம் சௌடேஸ்வரி தேவி ஆலயம் ஆகும்.
நந்தவரம் சௌடேஸ்வரி வரலாறு
ஸ்ரீசைலத்தில் அருள்புரியும் மல்லிகார்ஜுனர் மற்றும் பிரமராம்பிகையே தேவாங்கர் எனும் நெசவு தொழில் புரியும் சமுதாய மக்களுக்காக இராமலிங்கேஸ்வரர் மற்றும் சௌடேஸ்வரி என்ற திருநாமத்தில் அவர்களின் குலதெயவம் ஆகினர்.
ஆடி அமாவாசையே சௌடேஸ்வரி அன்னையின் ஜெயந்தி விழா ஆகும். அன்று தான் இந்த அன்னை தோன்றியதாக வரலாறு கூறுகிறது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் நந்தவரம் என்ற இந்த இடத்தில் நந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் அவனால் இந்த நந்தவரம் சௌடேஸ்வரி தேவஸ்தானம் கட்டப்பட்டது.
அப்பகுதியில் வசித்த நெசவு செய்பவர்களே இக்கோவில் அம்மனை குல தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் பூசித்து வந்தனர்.
கோவிலின் அனைத்து பூசைகளும் வைதீகர்கள் மற்றும் தேவாங்க சமூகத்தினரும் சேர்ந்தே நடத்தி வந்தனர்.
ஒரு கட்டத்தில் வைதீகர்கள் நெசவாளிகளை கோவில் உள்ளே வரவும், அன்னைக்கு சேவை புரியும் பணியையும் தடுத்தனர்.
இதனால் அவர்கள் மிகவும் மனம் வருந்தினர். அவர்களை கோவிலின் பிரதான வாசல் வழியாக வர அனுமதிக்காமல், பின் புறத்தில் வாயில் அமைத்து அதன் வழியே மட்டுமே வர அனுமதி அளித்தனர்.
மிகவும் மன வேதனையுடன் அன்னையிடம் முறையிட்டனர். தன் குழந்தைகளுக்கு வேதனை என்றால் அது அன்னைக்கும் தானே!
இதனால் அன்னை கருவறையை விட்டு வெளியேறினாள். பின்புற வாயிலுக்கு நேராக சுரங்கம் அமைத்து தன் பிள்ளைகள் வரும் பின்புற வாயிலை நோக்கி திரும்பி அமர்ந்தாள்.
இதனைக் கண்டு தங்களின் தவறை உணர்ந்த வேதியர்கள் மன்னிப்பு கேட்டு நெசவாளிகளை சேவை புரிய அனுமதி அளித்தனர்.
இன்றளவும் அன்னை அதே சுரங்ரகத்தில் பின்புற வாயிலை நோக்கியே அமர்ந்து அருளாட்சி புரிகிறாள்.
பக்திக்கு மயங்கிடுவாள் நந்தவரம் சௌடேஸ்வரி!
நந்தவரம் சௌடேஸ்வரி ஆலயம் உயர்ந்த இராஜ கோபுரத்துடன் அமைந்த மிகவும் தொன்மையான கோவில் ஆகும்.
சுரங்கத்தில் உள்ள கருவறையில் நான்கு திருக்கரத்துடன் நாகம் குடைபிடிக்க அமர்ந்த திருக்கோலம்.
கையில் வாள், கபாலம், உடுக்கை, சூலம் தாங்கி கோல விழிகளும் தெற்று பற்களும் கொண்டு கொலுவிருக்கிறாள் அன்னை சௌடேஸ்வரி தேவி.
செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, நவராத்ரி தினங்கள் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.
குழந்தை உள்ளம் படைத்த அம்பிகை தூய மனதோடு பக்தி செலுத்தினால் போதும் தன் பிள்ளைகளுக்காக ஓடி வந்து அருள்புரிவாள்.
வேண்டிய வரங்கள் வேண்டிய வண்ணம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அனைவரும் நந்தவரம் சென்று அன்னை சௌடேஸ்வரி தேவியை கண்டு வழிப்பட்டு சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.
ஆடி மாத தரிசனம் தொடரும்..!