Rakul Preet Singh: கொரோனாவா இருக்கட்டும்: பாதுகாப்பாக ஷூட் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்! சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட போதிலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து பாதுகாப்பாக படப்பிடிப்பு செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி படக்குழுவினருடன் பாதுகாப்பாக படப்பிடிப்பில் இருப்பதாக புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஈரான், குவைத், காங்காங் ஆகிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனினும், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தனியார் அலுவலகங்களுக்கு வீட்டில் இருந்தபடி பணியாற்றவும், தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, படங்கள் ரிலீஸ் ஆவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தபடி சினிமா பிரபலங்கள் பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மட்டும் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தான் பாதுகாப்பாக ஷூட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முற்றிலும் தேவைப்படாவிட்டால் யாரும் வெளியேற வேண்டாம். நேர்மையாக சித்தித்து புன்னகையோடு கொரோனாவிற்கு எதிராக போராடுங்கள்.
இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்ய முடியாது. ஆனால், படக்குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அயலான் மற்றும் கமல் ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.