சித்திரை கனி 2021: விஷூ கனி அல்லது சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? தமிழ் வருடப்பிறப்பு எவ்வாறு கனிகளை கொண்டு கொண்டாடப்படுகிறது?
தமிழ் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளாக கொண்டாடப்படுகிறது. இது உத்தராயண காலத்தில் சூரியனின் பயணத்தில் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் காலமாகும். இதனையே தமிழ் வருடத்தின் பிறப்பாக கொண்டாடுகிறோம்.
தமிழில் இத்தினத்தில் சித்திரை கனி காணுதல் என்றும் மலையாளத்தில் விஷூ கனி காணுதல் என்கிற சடங்கானது கேரளா மற்றும் தமிழகத்தில் அனைவரது வீட்டிலும் நடைபெறுகிறது.
விஷூ கனி அல்லது சித்திரை கனி காணுதல்
சித்திரை முதல் நாள் கனிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். காரணம் என்னவென்றால் மா, பலா, வாழை என்கின்ற முக்கனிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.
பங்குனி கடைசி நாள் இரவே விஷூ கனி காண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
பூஜை அறையில் மாகோலமிட்டு பின் ஒரு பெரிய தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் வைப்பர், தேங்காய் வைப்பர், பின்பு வெற்றிலை, பாக்கு, வாசனை மலர்களை கொண்டும், கொன்றை மலரினாலும் அலங்கரிப்பர்.
பணம் மற்றும் காசுகளை நிரப்பி வைப்பர், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த தட்டில் வைப்பர், அதன் பிறகு உப்பு, சர்க்கரை, அரிசி, பருப்பு முதலானவற்றை தனித்தனி பாத்திரத்தில் நிரப்பி வைப்பர்.
அதற்கு பின் உறங்க சென்று விட்டு காலையில் எழுந்தவுடன் முதலில் சென்று பூஜை அறையில் உள்ள மங்கள பொருட்களில் கண் விழிப்பர்.
இப்படி செய்வதால் வீட்டில் மங்களம் பொங்கும், லட்சுமி கடாக்க்ஷம் நிறையும் என்றும், வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறையும் என்பது நம்பிக்கை ஆகும். இதுவே சித்திரை கனி மற்றும் விஷூகனி காணுதல் எனப்படுகிறது
இந்த இளவேனிற்காலத்தில் சரக்கொன்றை மரத்தில் மஞ்சள் நிற பூக்கள் பூத்து குலுங்கும். இதனை காலையில் எழுந்தும் காண்பது மங்களம் என கருதுகின்றனர்.
சித்திரை பச்சடி மற்றும் மருந்து நீர்
வாழ்க்கை என்பது கசப்பும் இனிப்பும் கலந்ததே என்பதை உணர்த்த வேப்பம்பூ, வெல்லம், மாங்காய் முதலியவற்றை கொண்டு சித்திரை பச்சடி தயாரித்து பரிமாறப்படுகிறது.
மேலும் கோவில்களில் மூலிகையால் தயாரிக்கும் மருந்து நீர் வழங்கப்படும். அதனை குழந்தைகள் தலையில் பெரியவர்கள் வைத்து ஆசீர்வாதம் செய்வர். இதனால் நோய் நொடிகள் எதுவும் அண்டாது என்பது ஐதீகம்.
மேலும் மூத்தோர்கள் குழந்தைகளுக்கு கைவிசேடம் எனப்படும் சிறிய அளவிலான பணத்தை வழங்கி ஆசீர்வாதம் செய்வர். பின் இனிப்பு பதார்த்தங்களை உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து உண்டு புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.
கோவில்களில் விஷூ புண்ணிய கால பூஜை
விஷூ புண்ணிய காலம் என்பது பகல் பொழுதும் இரவு பொழுதும் சமமான அளவு கால நேரம் இருப்பதே விஷூ புண்ணிய காலமாகும்.
இக்காலத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. குருவாயூர் கிருஷ்ணன் கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் அனைத்து கோவில்களிலும் விஷூ கனி பூஜை நடைபெறுகிறது.
கோயில் முழுவதும் பல்வேறு வகையான பழங்களை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்கின்றனர்.
இத்தினத்தில் புத்தாடை அணிந்து, அருகில் உள்ள கோவில்களுக்கும், குல தெய்வ கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்கின்றனர். இதனால் ஆண்டு முழுவதும் நற்பலன்கள் கிடைக்கும் என்பது கண்கூடான உண்மை.
சித்திரை கனி 2021-ஆம் ஆண்டு விஷூ கனி காணல்
இவ்வாண்டு விஷூ கனி காணுதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி சித்திரை முதல் நாள் புதன் கிழமையில் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் அனைவரும் காலை எழுந்தவுடன் சித்திரை கனிகளை கண்டு “நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும்“ பெற்று ஆண்டு முழுவதும் சிறந்த பலன்களுடன் வாழ்வோம் என இறைவனை வேண்டி பிராத்தனை செய்வோம்.
மேலும் பார்க்க..
தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020 எவ்வாறு கணக்கிடப்படுகிறது?