5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தளங்கள், உணவகங்கள், மால்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 4-ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு குறித்த விவரங்களை மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. இதன்படி சுகாதாரத்துறை அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பட்டப்பட்டு இந்த ஊரடங்கு பின்பற்றப்படும்.
வரும் ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்கள், மால்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தந்த மாநில அரசுகள் முடிவை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியவை திறப்பதற்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலவரத்தை ஆராய்ந்து ஜூலையில் முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் முதலியவை கொரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும்.
மேலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை பொதுமக்கள் வெளியே அவசியமின்றி நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகள் அனைத்தும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு (containtment zones) பொருந்தாது எனவும் விரிவாக கூறப்பட்டுள்ளது.