நாயைக் கல்லால் அடித்ததற்கு துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த 30 வயதான அபாஃக் (afaq) என்பவர் வழக்கம்போல், நார்த் ஈஸ்ட் வெல்கம் காலனியில் நடந்துவரும்போது, அங்கு இருந்த நாய் அவரைப் பார்த்து குரைத்துள்ளது.
நாய், அவரைக் கடிக்க முயன்றதால் வேறுவழியில்லாமல், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கல்லால் அடித்துள்ளார்.
அபாஃக், நாயைக் கல்லால் அடிக்கும்போது, நாயின் முதலாளி மெக்தாப் இதைக் கவனித்துவிட்டார். கோபத்துடன் வீட்டிற்குள் சென்றவர் துப்பாக்கியுடன் திரும்பி வந்துள்ளார்.
நீண்டநேரம் இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் அபாக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
அபாஃக் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாயின் உரிமையாளர் மெக்தாப் (mehtab) தப்பித்து ஓடிவிட்டார். போலீஸ் அவரை வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதற்குமுன், குருக்ரம் என்ற பகுதியில் இதேபோல் வளர்ப்புப் பிராணியை வதைத்தாகக்கூறி, இரண்டு சிறுவர்கள் அடையலாம் தெரியாத 4 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.