தமிழகத்திலும் துவங்கியது தென்மேற்கு பருவமழை. தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை துவங்கியுள்ளதை அடுத்து தமிழகத்திலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்திலேயே பருவமழை துவங்கும். அதன்படி ஜூன் மாதத்தின் முதல் நாளான நேற்று கேரளம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழையும் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.
மேலும் மழை நீடிக்கும் என்பதால், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கன்னூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழை, இனிவரும் நாட்களில் கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த பருவமழை நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவிகிதமாக இருந்து வருகிறது.
இதனிடையே, தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் கோவாவிற்கு தென்மேற்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் சூரத்திற்கு தென்மேற்கு 920 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மேலும் இது புயலாக வலுப்பெற்று மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள வடக்கு திசையை நோக்கி நகரும் என்பதால் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு, கேரள கடற்கரை பகுதிகளில் 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதனால் இந்த பகுதிகளுக்கு வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாமென சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக, சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 7 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.