ராஜீவ் காந்தி கொலையாளிகள்: விரைவில் விடுதலை? தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கருத்து நிலவி வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை
கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்த தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. எழுவரும் ஏக காலத்தில் தண்டனை அனுபவித்து விட்டதால் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துருவினை அனுப்பியிருந்தார். ஆனால் அப்போது இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இது குறித்த வழக்கில் பல்வேறு சட்ட முறையிலான வாதங்களுக்குப்பின் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு முழுஅதிகாரம் உள்ளதாக தெரிவித்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியிருந்தது .
எனவே, தீர்ப்பினை செயல் படுத்தும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி ராஜிவ் காந்தி கொலையாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.
உச்சநீதிமன்றம் கேள்வி
ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த தீர்மானத்தின் மீது இதுவரை எந்த முடிவும் ஆளுநரால் எடுக்கப்படவில்லை எனக் கூறி தணடனை பெற்றவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் இன்னமும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த தமிழக அரசு எங்களால் தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற முடியும் எனவும் ஆளுநரை நிர்பந்திக்க முடியாது எனவும் கூறியது.
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் காலம் எடுத்துக்கொள்வதை தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க கூடாது எனவும் அரசின் கடைமையை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வழக்கில் ஆளுநருக்கு நேரடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கைவிரித்து விட்டனர்.
மேலும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு இருவரும் காலம் அவகாசம் வழங்கி வழக்கினை ஒத்திவைத்துள்ளனர் .
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கண்டனம் :
உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவினை விமர்சனம் செய்துள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் எழுவர் விடுதலையில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார் .
மேலும் இனியும் தாமதம் செய்யாமல் எழுவர் விடுதலையில் தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
விடுதலையாக வாய்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தினை தொடர்ந்து எழுவர் விடுதலையில் தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவாரங்களுக்குள் எழுவர் விடுதலையில் ஆளுநரின் முடிவு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட எழுவரும் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு நிச்சயம் விடுதலை செய்யப்படலாம் என கருத்து நிலவி வருகிறது. இது தமிழர் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.