டிக்டாக் செயலிக்கு முற்றிலும் தடை: அமைச்சர் உறுதி
ப்ளூவேல் என்ற நீலத்திமிங்கல விளையாட்டைத் தடை செய்ததுபோல, டிக்டாக் செயலியையும் விரைவில் தடை செய்வோம் என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் புதியதாக 9 பேருந்துகளை அமைச்சர் மணிகண்டன் துவங்கிவைத்தார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இளைஞர்களை காவு வாங்கிய ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்தது போல, தமிழகத்தில் டிக்டாக் செயலியையும் தடை செய்வோம்.
அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தீவிரவாதத் தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியான சம்பவம் கண்டனத்திற்கு உரியது.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது. மத்திய அரசு மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை வேரறுக்கவேண்டும்” எனக் கூறினார்.