இந்தியாவுடன் சமரசம் இல்லை. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை என ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
முதல் அரசுமுறை பயணம்:
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து முதன்முறையாக இந்தியாவிற்கு வரும் 24 தேதி அரசுமுறை பயணமாக வருகை தர உள்ளார்.
மேலும் அவர் வருகையின் போது குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட உள்ளார் எனவும் இந்திய மற்றும் அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வருகையை கொண்டாடும் விதமாக குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பல்வேறு புத்தாக்க பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
நமஸ்தே மோடி (ஹௌடி மோடி):
முன்பாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்க சென்ற பொழுது அவரது வரவேற்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை அமெரிக்க அரசும் அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களும் திறம்பட செய்திருந்தனர்.
குறிப்பாக நமஸ்தே மோடி (ஹௌடி மோடி) எனும் சிறப்பு நிகழ்ச்சி மோடியை மிகவும் கவர்ந்ததாக தெரிகிறது .
எனவே அதை போலவே ட்ரம்பின் இந்திய பயணத்தின் போதும் நமஸ்தே ட்ரம்ப் என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாலைகள் மேம்பாலங்கள், நகராட்சி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு உள்கட்டமைப்புகளும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன .
குடிசை வாழ் மக்கள் வெளியேற்றம்:
இது ஒருபுறம் இருந்தாலும் அகமதாபாத்தில் வசித்து வரும் குடிசை பகுதி மக்களை அப்புறப்படுத்த அகமதாபாத் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி சேரி பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது .
அதோடன்றி குடிசை பகுதிகளை சுவர் எழுப்பி மறைக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திரா பாலம் – சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்துடன் இணைக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் குடிசைகளை மறைப்பதற்கு சாலை ஓரத்தில் மிகப் பெரிய சுவர் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .
நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்:
இந்தியா வரும் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சாலை வழியாக பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெறும், மோட்டோரோ ஸ்டேடியம் அருகில் உள்ள சேரியில் உள்ள 45 குடும்பங்களை ட்ரம்ப் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன் காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் சேரி வாழ் மக்கள் அனைவரும் செய்வதறியாது கையை பிசைந்து நிற்கின்றனர் .
குடிசைப்பகுதி மக்களை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பிரச்சினையை உக்கிரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பிடத்தக்கது, ஒருபுறம் ட்ரம்பின் வரவேற்புக்காக அரசின் சார்பில் செயல் படுத்தப்பட்டு வரும் புத்தாக்க பணியினாலும் மறுபுறம் குடிசை பகுதி வாசிகளின் போராட்டத்தினாலும் அகமதாபாத் நகரம் சமீப நாட்களாக அதகளப்பட்டு வருகிறது .
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்:
இருபெரும் ஜனநாயக நாட்டின் தலைவர்களும் சந்திக்கும்பொழுது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “தற்போதைய பயணம் எனக்கு உற்சாகமாக உள்ளது.
இருப்பினும் இந்த பயணத்தின் பொழுது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை” எனப் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா அமெரிக்காவின் சலுகைகளை பறித்துக்கொள்வதாகவும், வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உலக வர்த்தக அமைப்பை அதிபர் வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது .
மேலும் உலகின் இரண்டாவது நிலை நாடான சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு சமீபத்தில்தான் இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்ட என்பது நினைவு கூறத்தக்கது.