இந்தியக் குடியரசு தினம் ஏன் கொண்டாப்படுகிறது? அதிகமானோர் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தினம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் குழம்பி விடுகின்றனர்.
இந்தியக் குடியரசு தின விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி கொண்டு வந்த விடுதலை நாள்
சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே 1930-ஆம் ஆண்டு ‘பூர்ண சுவராஜ்’ என்ற விடுதலை அறைக்கூவலை நினைவு படுத்தும் வகையில் ஜனவரி 26 ஆம் நாளை ‘விடுதலை நாள்’ எனக் காந்தியடிகள் அறிவித்தார்.
அப்பொழுது இருந்தே ஜனவரி 26-ஆம் நாள் ‘விடுதலை நாள்’ என்று காங்கிரசார்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு வந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டம்
சுதந்திரம் பெற்றபின் ஆகஸ்ட் 28-ஆம் தேதி 1947-இல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறுக்க ஒரு குழு பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது.
அக்குழு 1947-ஆம் ஆண்டு நவம்பர் 4-இல் ஒரு வரைவு அரசியலமைப்பு சட்டவாக்கவையில் சமர்பித்தது.
அந்த வரைவானது 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 166 நாட்கள் திறந்த அமர்வுகளில் அனைவரையும் சந்தித்து பல விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது.
பின் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24-இல் 308 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது.
1950-இல் காந்தி முன்பு கொண்டுவந்த ஜனவரி 26 விடுதலை நாள். மக்களாட்சி மலர்ந்த நாளாக (குடியரசு நாள்) அன்றைய நேரு தலைமையிலான அரசு அறிவித்தது.
இதன் பிறகே ஜனவரி 26, 1950 முதல் குடியரசு தின விழாவாக இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வேற்றுமை
சுதந்திரம் என்பது ஒருவர் மற்றவரிடம் இருந்து பெறுவது ஆகும். ஆகஸ்ட் 15, 1947-இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் பெற்றது சுதந்திரம் ஆகும். எனவே அன்று சுதந்திர தின விழா கொண்டாடுகிறோம்.
குடியரசு தினம் என்பது இந்தியா தனக்கென்று தனியாக அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி அதை ஏற்று கொள்ளப்பட்ட நாள் ஆகும். எனவே ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்.
இந்தியக் குடியரசு தினம் கொண்டாட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு தின விழாவானது தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர், டெல்லி இந்தியா கேட்டில் உள்ள மறைந்த வீரர்களுக்கான அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்தி விழாவை துவக்கி வைப்பார்.
பின் குடியரசுத் தலைவர் டெல்லியில் உள்ள இராஜ் பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்வார்.
அன்றைய நாள் முந்தைய ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்குவார்.
மாநிலம் முழுவதும் அம்மாநில ஆளுநர்கள் மூவர்ண கொடியினை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று வீரதீர செயல்கள் புரிந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு அயல்நாட்டு அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டில் குடியரசு தினமானது கொண்டாடப்படுகிறது.
2020-இல் குடியரசு தின விழா
இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் 71-வது குடியரசு தின விழாவானது குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
குடிமக்களாகிய நாம் குடியரசு நாளை வெறும் விடுப்பு தினமாகப் பார்க்காமல் நம்மால் இயன்ற சேவைகளை நம் தாய் நாட்டிற்காக செய்வோம் என உறுதி எடுப்போம்.