மனிதன் ஒரு சர்வாதிகாரி? விலங்குகள் உனக்கு அடிமையா?
இவ்வுலகு மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டது அல்ல. அறிவியல் கோட்பாட்டின்படி எடுத்துக்கொண்டால் இவ்வுலகில் கடைசியாகத் தோன்றிய இனம் மனித இனம்.
ஒரு குடும்பத்தின் கடைக்குட்டியே எப்பொழுதும் செல்லப்பிள்ளையாக இடம்பெறுவது வழக்கம். அதே போல் பூமிக்கு மனிதன் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டான்.
மனிதன் என்ன தவறு செய்தாலும் அதை இந்த பூமாதேவி கண்டுகொள்வதில்லை. ஒரு மனித இனத்தில் சந்தோசத்திற்காக ஏனைய உயிரினங்கள் சுதந்திரத்தை தொலைத்துவிட்டது.
சுதந்திரப்பறவை எனப் பெயரெடுத்த பறவை இனங்கள் கூட இன்று சுதந்திரமாக பறக்கமுடிவதில்லை. செல்போன் கோபுரங்களின் மீது மோதி உயிரிழக்கின்றது.
வற்றாத ஜீவா நதி எனப்பெயர்பெற்ற அத்தனை நதியும் தமிழகத்தில் வற்றிவிட்டது. மனிதனே குடிநீருக்கு ஏங்கும்போது விலங்குகள் எப்படி இருக்கும்?
காய்ந்த சருகுகளால் தமிழகத்தின் சில பகுதிகளில் காட்டுத்தீ. மறுபுறம் தண்ணீர் இன்றி யானைகள் பலி.
உண்ண உணவும் இல்லை. குடிக்க தண்ணீரும் இல்லை. பெண் யானை ஒன்று பாறை மீது மோதி உயிரிழந்து உள்ளது.
மனிதன் தன் பிரச்சனையை மட்டுமே பார்க்கிறான். ஒருபோதும் மற்ற உயிரனங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை.
அப்படியே யாராவது சிந்தித்தால் அவர்களைப் பைத்தியக்காரர் என முத்திரை குத்திவிடுகிறது இந்த உலகம். மற்ற உயிரினங்களும் சுதந்திரமாக வாழ வழிவகை செய்வதே ஆகச்சிறந்தது.