இராமகிருஷ்ண தீர்த்த வரலாறு. திருப்பதியில் ஆண்டிற்கு ஒரு முறை அனுமதிக்கப்படும் அதிசய தீர்த்தம்! திருமலை திருப்பதி பகுதியில் இப்படி ஒரு அருமையான இடமா?
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியா? பாவங்கள் தீர்க்கும் தை மாத பௌர்ணமி நீராடல் அதியசம்.
திருமலை திருப்பதி என்றதுமே நம் நினைவுக்கு வருவது கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ வேங்கடேசன் ஆலயம் தான்.
ஏழுமலைப்பன் ஆட்சி செய்யும் ஏழு மலைகளில் எண்ணற்ற அதிசயங்களும் அற்பதமான இடங்களும் உள்ளன.
அதில் மிக முக்கியமாக தற்பொழுது தை மாத பௌர்ணமியில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் “ஸ்ரீ இராமகிருஷ்ண தீர்த்தம்” ஆகும்.
பலரும் அறியாத பாவங்களைப் போக்கும் இப்புண்ணிய தீர்த்தமானது திருமலையில் ஸ்ரீீநிவாசன் கோயிலில் இருந்து வடக்கே சுமார் 6 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் சிறப்புகளை பற்றி விரிவாக காண்போம்.
இராமகிருஷ்ண தீர்த்த வரலாறு
முற்காலத்தில் அடர்ந்த வனப் பகுதியான திருமலையில் இராம கிருஷ்ணன் என்கிற முனிவர் ஸ்ரீநிவாசனை நோக்கி தவம் புரிய திருமலைக்கு வந்தார்.
திருமலையின் வடக்கே உள்ள ஒரு வனப்பகுதியில் ஒரு குளம் அமைத்து அதன் அருகே தவம் இயற்றி வந்தார். பல ஆண்டுகள் தவம் புரிந்ததால் அவரை சுற்றி எறும்பு புற்று மூடியது.
தேவலோக அதிபதியான தேவேந்திரன் இதனை கண்டு முனிவரின் தவத்தை சோதிக்க எண்ணி வானில் இருந்து இடி மற்றும் மின்னலை முனிவர் மீது இறக்கினான்.
ஆனால் தவ வலிமையால், அந்த முனிவர் மீது படாமல் இடி வேறு இடத்தில் விழுந்தது. முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பெருமாளும் தோன்றினார்.
எறும்பு புற்று உடைந்து முனிவர் வெளியே வந்து. ஸ்ரீநிவாசனை பணிந்தார். அவர் அமைத்த அப்புண்ணிய குலத்தில் பௌர்ணமியில் நீராடும் மக்களுக்கு சகல பாவங்களும் நீங்க வேண்டும் என்று வரம் கேட்க பெருமாளும் வரமளித்தார்.
அன்று முதல் முனிவரின் பெயராலே இராமகிருஷ்ண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
தை மாத பௌர்ணமி நீராடல்
அடர்ந்த மலைப் பகுதி மற்றும் வன விலங்குகளால் மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்த்ததிற்கு செல்ல எல்லா பௌர்ணமியும் அனுமதி இல்லை.
ஆந்திர வனத் துறையினர் கட்டுபாட்டின் கீழ் “தை மாத பௌர்ணமி” அன்று மட்டும் காட்டுப் பகுதியில் நடைப்பயணமாக சென்று இராமகிருஷ்ண தீர்த்தத்தில் நீராட அனுமதி வழங்கப்படுகிறது.
இயற்கையான மலைகள் காடுகளுக்கு இடையே அமைந்த அற்புதமான இடமாகும். இது ஒரு அதிசய தீர்த்தம் என்றே கருதப்படுகிறது.
திருமலையில் இருந்து செல்லும் வழி
திருமலை திருப்பதியில் இருந்து பேருந்து மூலம் பாபவிநாசம் அணையை அடைந்து. அங்கிருந்து அணை பாலத்தை கடந்து மலை ஏறத் துவங்க வேண்டும்.
தேவஸ்தானத்தின் மூலம் உணவு, நீர், மருத்துவ வசதி அனைத்தும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2020 இல் இராமகிருஷ்ண தீர்த்த பயணம்
இந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 6 முதல் மாலை 6 வரை இராமகிருஷ்ண தீர்த்ததிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரடுமுரடான காட்டு வழி என்பதால் சற்று கவனமாக பயணிக்க வேண்டும்.
எல்லா வருடமும் இராமகிருஷ்ண தீர்த்தம் செல்லும் பக்தர்கள் வருகை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்த வண்ணம் உள்ளது என்று திருமலை தேவஸ்தான நிர்வாகம் கூறுகிறது.
செல்லும் வழி முழுதும் குடிநீர் வசதி தற்காலிக பயனிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்லும் வழியில் வற்றாத சுனை ஒன்று இருக்கும்.
வெயில் காலத்திலும் குளிர்ச்சி மாறாமல் இருக்கும். செல்பவர்கள் தவறாமல் அதை தரிசிக்கவும்.
இராமகிருஷ்ண தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீநிவாசனை தரிசித்தால் பாவங்கள் தொலைவதுடன் எண்ணிய காரியம் அனைத்தும் ஈடேறும் என்பது பலரின் அனுபவரீதியான உண்மை ஆகும்.