சென்னை: தமிழ்நாட்டின் கொரோனா தொற்று 35000ஐ நெருங்கியது. செவ்வாய் கிழமை 1,685 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன மற்றும் இன்று மட்டும் 21 பேர் கொரோனாவால் இறந்தனர். மாநிலத்தின் கொரோனாவால் இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 307 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 1,242 கொரோனா தொற்று
சென்னையில் மட்டும் 1,242 கொரோனா தொற்றுகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 36 பேருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் 158 தொற்றுகளும், திருவள்ளூரில் 90 தொற்றுகள் மற்றும் காஞ்சிபுரத்தில் 32 தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மதுரை, திருவண்ணாமலை மற்றும் வேலூரில் தலா 16 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் தலா 10 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன மற்றும் மற்ற 18 மாவட்டங்களில் ஓர் இலக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன.
Thala Ajith; வலிமை படக்குழுவினருக்கு அறிவுரை வழங்கிய தல அஜித்! கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்க வேண்டும் என்று தல அஜித் அறிவுரை வழங்கியுள்ளார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பை இப்போது தொடங்க வேண்டாம் என்று தல அஜித் வலிமை படக்குழுவினர் மற்றும் போனி கபூரை கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டையே உலுக்கிய சம்பவம் தான் கொரோனா வைரஸ் தாக்கம். நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும், பல விதிமுறைகளுடன் கொரோனா லாக்டவுன் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றிற்கு இன்னும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சினிமா படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும், பலரும் சினிமா படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ் ஹீரோக்களின் படங்களின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அந்த வகையில், ரஜினியின் அண்ணாத்த, தல அஜித்தின் வலிமை ஆகியவை முக்கியமானவை.
வெளிநாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வலிமை படப்பிடிப்பு குறித்து தல அஜித் தனது படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளருக்கு முக்கியமான அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், உள்ளூர் அரசிடம் அனுமதி பெற்றாலும் அவசப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடம், தான் வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னரே அடுத்த படத்திற்கு செல்வேன் என்றும், கொரோனா நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும்படியும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிப்பதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vishnu Vishal; விஷ்ணு கேட்ட வாய்ப்பு: கலாய்த்த சாந்தனு! இயக்குநர் கௌதம் மேனனிடம் தனக்கு பட வாய்ப்பு தரும்படி நடிகர் விஷ்ணு விஷால் வாய்ப்பு கேட்டுள்ளார். இதனை கலாய்க்கும் வகையில், சாந்தனு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு இயக்குநர் கௌதம் மேனனிடம் பட வாய்ப்பு கேட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் கௌதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு சான்ஸ் குடு பொண்ணு என்ற பாடல் வெளியானது. நடிகர் சாந்தனு, மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் இந்தப் பாடலில் நடித்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடலில் கானா குணா இணைந்து பாடியுள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், யூடியூப்பில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த நிலையில், இந்தப் பாடலுக்கு நடிகர் விஷ்ணு விஷால் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதோடு, டுவிட்டரில், கௌதம் மேனன் இயக்கத்தில் தனக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதைக் கண்ட சாந்தனு நான் பிட்டு போடலாம் என்று நினைத்தேன் அதற்குள்ளாக நீ முந்திக்கிட்டீயா என்று ஜாலியாக பதில் டுவீட் போட்டுள்ளார்.
Nick Jonas Watch Rs 7.5 Crore; பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸின் கை கடிகாரத்தின் விலை ரூ.7.5 கோடி! நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் அணிந்திருக்கும் கை கடிகாரத்தின் விலை ரூ.7.5 கோடி என்று கூறப்படுகிறது.
ஒரு கடிகாரத்தின் விலை ரூ.7.5 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் ஏராளமான படங்களிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துள்ளார்.
இவர், ஹாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்க பாப் பாடக்ர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும், அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அங்கு, அவரது சொகுசான வாழ்க்கையைக் கண்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்து வருகின்றனர்.
ஆம், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலுள்ள சான்பெர்னாண்டோ பள்ளாத்தாக்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி வீட்டை கணவருடன் சேர்ந்து ரூ.144 கோடிக்கு வாங்கினார்.
அதில், 7 படுக்கை அறைகள், 11 குளியல் அறைகள், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், பார், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் என்று ஏராளமான வசதிகள் இருக்கிறது. புதிதாக ரூ. 3 கோடிக்கு ஒரு அழகான சொகுசு காரையும் வாங்கியுள்ளனர்.
இருவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வீடு என்றும், நெட்டிசன்கள் அப்போது விமர்சனம் செய்தனர். இதையெல்லாம்விட, விலை உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள், காலணிகள் என்று விதவிதமாகவும் அழகானதாகவும் அதிக விலையிலும் வாங்கி அணிந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோல்டன் குளோப் விருது விழாவில் கணவர் நிக் ஜோனஸ் உடன் கலந்து கொண்டார்.
அப்போது, அந்த விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் நிக் ஜோனஸின் கையையே பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம், அவர் அணிந்திருந்த கை கடிகாரம். ஆம், அந்த கடிகாரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
அதில் வைர கற்களும், நிறைய பதிக்கப்பட்டுள்ளது. அந்த கை கடிகாரம் உலகிலேயே அதிக விலை கொண்டது என்றும் பேசப்பட்டது.
தற்போது அந்த கை கடிகாரத்தின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 7.5 கோடி என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya Cooking Picture; குண்டாவில் சமையல் செய்த சூர்யா: வைரலாகும் புகைப்படம்! டேக்சா போன்று இருக்கும் சிறிய குண்டாவில் சமையல் செய்த சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமையல் செய்த சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா. எப்போதும் பிஸியாகவே இருந்து வந்தார். தற்போது கொரோனா வந்து அனைவரையும் சும்மாவே இருக்க வைத்துவிட்டது.
ஆம், சினிமா பிரபலங்கள், அப்பாவி ஜனங்கள், அரசியல் பிரபலங்கள் என்று அனைவரும் வீட்டிலே முடங்கியிருந்தனர். தற்போது தமிழகத்தில் மட்டும் வரும் 30 ஆம் தேதி வரையில் 5 ஆம் கட்ட லாக்டவுன் அம்லபடுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.
சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீட்டில் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்த சூர்யா சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், சிறிய அளவிலான டேக்சா போன்று இருக்கும் குண்டாவில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று லாக்டவுன் காரணமாக வெளியாகவில்லை. ஆனால், சூர்யா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.
இதே போன்று சூரரைப் போற்று படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படம் லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sanjana Reddy; பெண் இயக்குநர் கவலைக்கிடம்: கொரோனா வைரஸா? ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண் இயக்குநர் சஞ்சனா உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கியவர் பெண் இயக்குநர் சஞ்சனா ரெட்டி. ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ராஜூ காடு என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமாகியுள்ளார்.
இந்தப் படத்தில் ராஜ் தருண் மற்றும் அமைரா தஸ்தூர் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தை கோனா வெங்கட் தயாரிக்கிறார். இந்த நிலையில், திடீரென்று சஞ்சனா ரெட்டிக்கு தீவிரமாக காய்ச்சல் அடித்துள்ளது.
இதனால், வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் உடனிருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆனால், உண்மையில், சஞ்சனா ரெட்டி டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே கடந்த 3 நாட்களாக எடுத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சஞ்சனா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஜீன் 15 இல் ஆரம்பிக்கப்பட இருந்த 10ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக செவ்வாய் கிழமை தமிழக அரசு அறிவித்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பரவல் காரணமாக அனைத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
11ஆம் வகுப்பு தேர்வுகளும் இரத்து
மாநில அரசு நிலுவையில் இருந்த 11ஆம் வகுப்பு தேர்வுகளையும் இரத்து செய்தது. 12ஆம் வகுப்பு தேர்விற்கு வராதவர்களுக்கான மறுதேர்வுகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு “மாணவர்களுக்குக்கான மதிப்பெண் 80% காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களில் இருந்தும் மீதம் 20% அவர்களின் வருகை பதிவேட்டில் இருந்தும் கணக்கு செய்ய முடிவு” என அறிவிக்கப்பட்டது.
செவ்வாய் அன்று நடந்த உயர்மட்ட குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கொரோனா நேரத்தில் தேர்வுகள் ஆபத்து
முன்னர், எதிர்கட்சிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா இருக்கும் நேரத்தில் தேர்வுகள் வைக்கப்படுவது மாணவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவித்திருந்தது மட்டுமல்லாமல் நீதிமன்றம் ஜுன் 11 ஆம் தேதி வரை தேர்வு குறித்து முடிவெடுக்க அரசுக்கு கால அவகாசம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திங்கள் கிழமை தெலுங்கானாவில் அனைத்து 10ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் இவ்வாறு முடிவெடுக்க நிர்பந்தம் ஏற்பட்டதாக தெரிகிறது.
Anil Suri Died; கமல் பட தயாரிப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்! ஆரம்ப காலங்களில் கமல் ஹாசனை வைத்து பாலிவுட்டில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அணில் சூரி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாலிவுட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அணில் சூரி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கர்மயோகி, ராஜ் திலக், பெகுன்னா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் அணில் சூரி. இவருக்கு வயது 77. கமல் ஹாசன் நடித்த ராஜ் திலக் படத்தை தயாரித்தவர். இந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரபல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு போதுமான இடவசதி இல்லை. இதையடுத்து, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு கோவிட் 19 கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் உடல் மோசமடைந்ததைத் தொடர்ந்து வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன்று இரவு 7 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
அணில் சூரியில் இறுதிச் சடங்கு வெள்ளியன்று நடந்தது. இதில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அவர்களும், பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டுதான் அணில் சூரியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணில் சூரியின் மறைவு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணில் சூரிக்கு கமல் ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Chiyaan60 Release Date; சியான்60 ரிலீஸ் தேதி அறிவிப்பு? விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் சியான்60 படம் வரும் 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியான்60 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
சியான்60 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குறி ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
கடைசியாக இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பேட்ட படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் மருமகனான தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, சியான் விக்ரம் நடிக்கும் 60 ஆவது படமான சியான்60 படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக சியான் விக்ரமுடன் இணைந்துள்ளார். சியான்60 படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்க இருக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் உருவாகி வருகிறது.
விரைவில், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சியான்60 படத்தில் விக்ரம் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சியான்60 படம் குறித்து தற்போது தான் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சியான்60 எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதன்படி, வரும் 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை. மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களிலும் விக்ரம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Asuran Remake; தனுஷின் அசுரன் சீன மொழியில் ரீமேக்கா? தயாரிப்பாளர் தாணு விளக்கம்! தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் தாணு விளக்கம் கொடுத்துள்ளார்.
அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் இளைஞராகவும் வயதானவராகவும் நடித்து கடந்தாண்டு திரைக்கு வந்த படம் அசுரன். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.
மேலும், கருணாஷின் மகன் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன், சென்றாயன், பாலாஜி சக்திவேல், வெங்கடேஷ் ஆகியோர் பலரும் நடித்திருந்தனர்.
தனுஷிற்கு இரு மகன்கள். மூத்த மகனை கொன்ற வில்லன்களை இளைய மகன் கொன்று பழி தீர்ப்பதும், அந்த இளைய மகனை ரவுடிகளின் கொலை வெறியில் இருந்து காப்பாற்ற தனுஷ் போராடுவதும் தான் அசுரன் படத்தின் கதை.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. நாரப்பா என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில், பிரியாமணி மற்றும் வெங்கடேஷ் இருவரும் நடிக்கின்றனர்.
கன்னட மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில், சிவராஜ் குமார் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், சீன தயாரிப்பு நிறுவனம் அசுரன் படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இது குறித்து, அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு கூறுகையில், அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக வெளியான செய்தியில் எந்த உண்மையுமில்லை.
சீன மொழியில் அசுரன் படத்தை ரீமேக் செய்ய யாரும் எங்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஆனால், அசுரன் படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிட இருக்கிறோம்.
அதுவும், கொரோனா முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு தான் என்று கூறி வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.