2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம்; மீண்டும் அரசு மருத்துவமனை அலட்சியம்
சமீபத்தில் தான் கர்ப்பிணி ஒருவருக்கு சாத்தூர் மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. நோயால் பாதித்தவரின் ரத்தம் ஏற்றப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டு வயதுக் குழந்தை ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்-சித்ரா என்ற தம்பதியருக்கு 2 வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.
அதில் ஒரு குழந்தைக்கு 6 மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதயக் கோளாறு ஏற்பட்டு உள்ளதாக சிகிச்சை அளித்துள்ளனர். அப்பொழுது குழந்தையின் உடலில் ரத்தம் குறைவாக உள்ளது என ரத்தம் ஏற்றியுள்ளனர்.
இதன் பிறகு அந்தக்குழந்தைக்கு உடல் முழுவதும் கட்டிகளும், தடுப்புகளும் ஏற்பட்டு உள்ளது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது அந்தக்குழந்தைக்கு ஹெச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டது. தாய், தந்தை இருவருக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை.
அந்தக் குழந்தையுடன் பிறந்த மற்றொரு குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை. எப்படி இந்தக் குழந்தைக்கு மட்டும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது என குழம்பிவிட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு ரத்தம் ஏற்றியதன் மூலமே ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டதாக நிர்வாகத்திடம் சண்டையிட்டுள்ளனர்.
ஆனால் இவ்விசயத்தை வெளியில் சொல்லக்கூடாது என தம்பதியரை, மருத்துவமனை நிர்வாகத்தினர் மிரட்டி உள்ளனர்.
இதனால், விஸ்வநாதன்-சித்ரா தம்பதியினர் கோவைக் கலெக்டரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
இந்த சம்வத்தைத் தொடர்ந்து சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.