கபில் குஜ்ஜர் எங்கள் கட்சி இல்லை; அமித்ஷா சதி – ஆம் ஆத்மி மறுப்பு. துபாக்கியால் சுட்ட நபர் எங்கள் கட்சி என சொல்வது அமித்ஷா செய்த சதி என ஆம் ஆத்மி குற்றம் சுமத்தி உள்ளது.
டெல்லி: ஷாஹீன்பாக் என்ற இடத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, அப்பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது.
துப்பாக்கியால் சுட்ட நபர் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள் நெருங்கி உள்ள நிலையில் போலீசார் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 30-ம் தேதி அன்று ஜாமியா மில்லியா கல்லூரி அருகே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தினர்.
அப்போது அங்கு திடீரென தோன்றிய ஒரு மர்ம நபர் பேரணியில் ஈடுபட்ட மாணவர்களைப் பார்த்து சரமாரியாக சுட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சாலையை ஆக்ரமித்து 49-வது நாளாக பெண்கள் போராட்டம் நடத்திய இடத்திலும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இந்தமுறை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவருடைய பெயர் கபில் குஜ்ஜர் என்பது தெரியவந்தது.
இது பற்றி டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தேவ் கூறியதாவது, “கபில் குஜ்ஜர் மொபைல் போனில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது. மேலும் குஜ்ஜரின் தந்தை ஆம் ஆத்மியை சேர்ந்தவர் என்பதை அவரே ஒப்புக்கொண்டு விட்டார்” என ராஜேஷ் தெரிவித்தார்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் இது அமித் ஷாவின் திட்டமிட்ட சதி. தேர்தல் நேரத்தில் அவர்கள் பெயர் அடிபடாமல் இருக்க ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஆம் ஆத்மி மீது பழிபோடுகின்றனர். எனக் கூறினார்.