மகா சிவராத்திரி உருவான கதை. Maha Sivarathiri Tamil மஹா சிவராத்திரி சிறப்புகள். சிவராத்திரி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? சிவராத்திரிகள் எத்தனை வகைப்படும்?
கும்ப மாதம் என்று கூறப்படும் மாசி மாதத்தில் (தேய்பிறை) கிருஷ்ண பட்சத்தில் வரும் சதுர்தசி திதியுடன் கூடிய தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது.
சிவராத்திரிகள் எத்தனை வகைப்படும்?
• நித்திய சிவராத்திரி
• மாத சிவராத்திரி
• பட்ச சிவராத்திரி
• யோக சிவராத்திரி
• மகா சிவராத்திரி
இவ்வாறு சிவராத்திரிகள் ஐந்து வகைப்படும். இதில் மாசி மாதம் வரக்கூடிய சிவராத்திரியே “மகா சிவராத்திரி (Maha sivaratri)” என்று கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி உருவான கதை வரலாறு
பிரளயம் முடிந்து உலகம் முழுதும் உள்ள உயிர்கள் அனைத்தும் சிவனிடத்தில் ஒடுங்கின.
பிரம்மனும் சிவனிடத்தே ஐக்கியம் ஆனார். உயிர்கள் ஏதும் தோன்றவில்லை.
இதை கண்டு அகில உயிர்களுக்கும் தாயான பார்வதி தேவி மனம் வருந்தி மீண்டும் பிரபஞ்சம் உருவாகி உயிர்கள் பிறக்க சிவனை நோக்கி இரவு முழுவதும் தியானித்து சிவன் மனம் மகிழ பூசைகள் செய்தார்.
பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன் மீண்டும் உலகம் தோன்ற அருள் புரிந்தார்.
அன்னையும் அவள் பூஜை செய்து அருள் பெற்ற தினத்தில் எவர் சிவனிற்கு பூஜைகள் செய்தாலும் அவர்களுக்கு சகல சௌக்கியமும், முக்தியும் கிடைக்க வேண்டும் என்ற வரம் வேண்டினார்.
சிவனும் பார்வதியின் வேண்டுதலை ஏற்று வரமளித்தார். பார்வதி பூஜைகள் செய்த அந்த இரவே மகா சிவராத்திரி (மஹா சிவராத்திரி) தினமாகும்.
இந்நாளில் நந்தி முதல் சனகாதி முனிவர்கள் வரை பலரும் விரதமிருந்து பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றனர்.
மஹா சிவராத்திரி சிறப்புகள் – கதை
ஒரு காட்டில் வாழ்ந்து வந்த குரங்கானது வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தது.
குரங்கு வில்வம் என அறியாது இலைகளை இரவு முழுவதும் கொய்து கீழே போட்டு கொண்டே இருந்தது. அந்த இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன.
அறியாமல் குரங்கு எறிந்த போதிலும் சிவராத்திரி அன்று இரவு முழுதும் சிவனிற்கு அர்ச்சனையாக மாறியதால் இறையருள் பெற்றது.
அந்த குரங்கே “முசுகுந்த சக்ரவர்த்தி” ஆக பிறந்தார் என்ற கதை உள்ளது.
ஒரு சமயம் வேடன் ஒருவன் இரவில் காட்டில் புலி துரத்தி வருவதற்கு அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். புலியானது அவனை இரையாக்க அந்த மரத்தையே சுற்றி கொண்டே வந்தது.
வேடன் இரவில் கண் அயர்ந்து விடாமல் இருக்க மரத்தின் இலைகளை கொய்து எறிந்து கொண்டே இருந்தான். அந்த இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டே இருந்தது.
சிவராத்திரி என்று வேடன் அறியாமல் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்த போதிலும். சிவன் மனம் மகிழ்ந்து அவனுக்கு முக்தி அளித்தார் என்ற கதையும் கூறப்படுகிறது.
சிவராத்திரி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?
சிவராத்திரியன்று முதல் நாள் ஒரு பொழுது உண்டு சிவராத்திரியன்று உண்ணாமல் விரதமிருந்து நான்கு சாம பூஜைகள் செய்து மறுநாள் காலை நீராடி சிவ தரிசனம் செய்து பின் சிவராத்திரி விரதம் முடிக்க வேண்டும்.
நான்கு சாம பூஜைகளும் சிவனிற்கு பிடித்தமான அபிஷேக பொருட்கள், மலர்கள், இலைகள், பழங்கள், கிழங்கு வகைகள், நைவேத்தியங்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.
நான்கு சாம பூஜை நேரங்கள்
முதல் காலம் – இரவு 07:30PM
இரண்டாம் காலம் – இரவு 10:30PM
மூன்றாம் காலம் – நள்ளிரவு 12:00AM
நான்காம் காலம் – அதிகாலை 04:30AM
நான்கு சாம பூஜை முறைகள்
முதல் சாமம் (இரவு 7:30PM)
இந்த முதல்கால பூஜை, ஸ்ருஷ்டி தொழில் புரிபவரான “பிரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் “பஞ்ச கவ்வியத்தால்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்ய வேண்டும்.
மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரை மற்றும் அரலி பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பால் அன்னம் மற்றும் பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாகப் படைக்க வேண்டும்.
நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. தமிழில் சிவபுராணம் ஓதி பூஜிக்க வேண்டும்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் சாமம் (இரவு 10:30PM)
இந்த இரண்டாவது சாம பூஜையை காக்கும் கடவுளான “விஷ்ணு” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்.
சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், துளசியால் அர்ச்சனைகள் செய்தும், பாயசம் நிவேதனமாக படைக்க வேண்டும்.
நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர் வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. கீர்த்தி திருஅகவல் ஓதி பூஜிக்க வேண்டும்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தனம் தானியம் சம்பத்துக்கள் வந்து சேரும்.
மூன்றாம் சாமம் (நள்ளிரவு 12:00AM)
இந்த மூன்றாம் சாம பூஜை அருளே வடிவான “அம்பாள்” பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், மூவிதல் வில்வம் மற்றும் ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து “எள் அன்னம்” நிவேதனமாக படைக்க வேண்டும்.
இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
திருவண்டபகுதி ஓதி பூஜிக்க வேண்டும். இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை “லிங்கோத்பவ காலம்” என்பர்.
இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக வானிலும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடைய காலம் ஆகும்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க அம்பிகையின் அருளும் உடன் கிடைக்கும்.
நான்காம் சாமம் (அதிகாலை 4:30AM)
இந்த நான்காவது சாம பூஜையானது முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் போற்றி திருஅகவல் பாட வேண்டும்.
சுத்தான்னம் (வெள்ளை சாதம்) நிவேதனமாகப் படைத்தும் ஷோடச உபசாரங்கள் செய்தும் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.
2020-இல் மஹா சிவராத்திரி – 2020 Maha Sivarathiri Tamil
இந்த ஆண்டு Maha Sivarathiri (Tamil) பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் வெள்ளி கிழமை வருகிறது.
சிவ ஸ்தலங்கள் சென்று எல்லாம் வல்ல சர்வலோக நாயகனான ஈசனை திருகோயிலிற்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த நாளில் விரதமிருந்து தேவார, திருவாசகங்கள் பாடி நான்கு சாமங்களும் “நமசிவாய” என்ற மந்திரம் ஓதி சிவபெருமானை பூசித்து எல்லா பாவங்களும் நீங்கி நற்கதி பெறுவோம்.